காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மோடி பிரதமராக சிறப்பு யாகம்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நரேந்திர மோடி பிரதமராக வேண்டி, சிறப்பு யாகம் நடக்கிறது. இதில், நேற்று மாநில பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர், முரளீதர் ராவ் பங்கேற்றார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், கடந்த, 14ம் தேதி, இந்த யாகத்தை வேதவிற்பனர்கள் துவக்கினர். வரும், 23ம் தேதி வரை நடக்கும் இந்த சிறப்பு யாகம், உலக அமைதி மற்றும் நன்மைக்காக நடத்தப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், பவுர்ணமியான நேற்று, இந்த அருண ஜெப யாகத்தில், பா.ஜ., தமிழக தேர்தல் பொறுப்பாளர் முரளீதர் ராவ் பங்கேற்றார். யாக சாலை முன், ஒரு துண்டுச்சீட்டை முரளிதர் ராவ் வைத்து வழிபட்டார். அந்த துண்டுச் சீட்டில், வேட்பாளர்களை எழுதி இருப்பதாகவும், வேட்பாளர்கள் வெற்றிக்காக, அவர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ., கூட்டணி கட்சிகளிடையே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அதில் பங்கேற்காமல், யாகத்தில், முரளீதர் ராவ் பங்கேற்றது குறித்து, அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, மவுனமாக சிரித்தபடி நழுவினர். பெயர் வெளியிட விரும்பாத, மேலிடத்திற்கு நெருக்கமான, மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், நரேந்திர மோடி பிரதமராக வேண்டி, இந்த யாகத்திற்கு, பா.ஜ., நலம் விரும்பி ஏற்பாடு செய்திருக்கிறார். அவரது அழைப்பின்பேரில், இந்த யாகத்தில், பவுர்ணமியான நேற்று, முரளீதர் ராவ் பங்கேற்றார். கட்சிக்கும், இந்த யாகத்திற்கும் சம்பந்தமில்லை என்றார். - நமது நிருபர் -