உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யுகாதி பெருவிழா கோலாகலம்: சித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை!

யுகாதி பெருவிழா கோலாகலம்: சித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை!

நாமக்கல்: தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு, நாமக்கல் சுப்புலட்சுமி மஹாலில் யுகாதி பெருவிழாவும், ரெட்டிப்பட்டி கங்கா நகர் சித்தி விநாயகர் சன்னிதானத்தில் சிறப்பு பூஜைகளும் கோலாகலமாக நடந்தது. மாவட்ட நாயுடுகள் நலச்சங்கத்தின் சார்பில், யுகாதி பெருவிழா, நாமக்கல்-திருச்செங்கோடு சாலை சுப்புலட்சுமி மஹாலில் நேற்று நடந்தது. காலை, 8.30 மணிக்கு, மணமாலை நிகழ்ச்சியும், மதியம், 3 மணிக்கு ஓவியம், பேச்சு, மாறுவேடம் மற்றும் பாட்டு போட்டியும் நடந்தது. அதில், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மகளிருக்கான கோலப்போட்டியில், பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கடந்த கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செலயாளர் வெங்கடசுப்ரமணியம் வரவேற்றார். பொருளாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவ, மாணவியர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

* நாமக்கல்-துறையூர் சாலை, ரெட்டிப்பட்டி கங்காநகர் சித்தி விநாயகர் சன்னிதானம் மற்றும் ஜோதிட நிலையத்தில், தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, யுகாதி பண்டிகை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவில், தெலுங்கு வருட பிறப்பின் மகத்துவம், புது பஞ்சாங்க பலன்கள் சொல்லப்பட்டு, பூஜ்யஸ்ரீ சன்னிதானம் சங்கரய்யர் ஸ்வாமிகள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். மேலும், பக்தர்களுக்கு பிரசாதமும், சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்யகயறும், ஆண்கள், குழந்தைகளுக்கு சக்தி கயிறும் வழங்கப்பட்டது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியிடம் ஆசீர் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !