தஞ்சையில் 1,600 பால்குடங்கள் பக்தர்கள் ஊர்வலம்!
தஞ்சாவூர்: தஞ்சையில், பிராமணாள் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் 1,600 பால்குடங்களை எடுத்து, பக்தர்கள் ஊர்வலம் நடத்தி, புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பாலபிஷேகம், சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதனையொட்டி, நேற்றுக்காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலம் சிவகங்கை பூங்காவில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. தஞ்சை பெரியகோவில் பின்புறமுள்ள சிவகங்கை பூங்கா, பெத்தண்ணன் கலையரங்கில் இருந்து, நாதஸ்வர இசை, வாணிவேடிக்கை முழங்க, பக்தர்கள் புறப்பட்டனர். தொடர்ந்து, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி, கொண்டிராஜபாளையம், வெள்ளை பிள்ளையார்கோவில், பழைய மாரியம்மன் கோவில் ரோடு, சாலக்கார தெரு, ஆதிமாரியம்மன் கோவில் வழியாக, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை ஊர்வலம் அடைந்தது. அங்கு, அம்மனுக்கு பாலபிஷேகம் நடத்தி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு, இரவு 7 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடு துவங்கியது இதனையொட்டி, தஞ்சை மேலவீதியிலுள்ள, சங்கரமடத்தில் அம்மன் வெள்ளி உருவ சிலைக்,கு 28ம் தேதி முதல் ஏப்., 1ம் தேதி வரை காலையில் வேதபாராயணம், மாலையில் சிறப்பு அலங்காரம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, புன்னைநல்லூர் மாரியம்மன் பிராமணாள் கைங்கர்ய டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.