ஓசூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :4213 days ago
ஓசூர்: ஓசூர் அருகே உள்ள, வரதராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழா, வரும், 21ம் தேதி நடக்கிறது. ஓசூரை அடுத்த, சூளகிரி மலை அடிவாரத்தில், பிரசன்னா வரதராஜ பெருமாள் மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், வரதராஜ பெருமாள் ஜெயந்தி மற்றும் திருக்கல்யாண உற்சவம் வெகுசிறப்பாக நடப்பது வழக்கம். இதன்படி, ஐந்தாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி, வரும், 21ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, வரதராஜ ஸ்வாமிக்கு, விஸ்வசேனை ஆராதனை, மகா சங்கல்பம், பஞ்சாமிர்த அபிஷேகம், மகா சுதர்சன ஹோமம் ஆகிய நிகழ்ச்சியும், தொடர்ந்து வரதராஜ பெருமாள் ஸ்வாமி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு, பல்லக்கு உற்சவம் திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.