திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை வருஷாபிஷேகம் நடக்கும். மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமான தை உத்திரத்தில் வருஷாபிஷேகமும். கோயில் கும்பாபிஷேகம் நடந்த தினத்திலும் வருஷாபிஷேகம் நடக்கும். நேற்று கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட தினம் என்பதால் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டது.நேற்று காலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின் கும்பங்களுக்கு பூஜைகள் நடந்தது. காலை 9.15 மணிக்கு கும்பங்கள் விமான தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டன. மூலவர், உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் அபிஷேகங்கள் நடந்தது. மூலவர் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. குமரவிடங்கபெருமான் இரவு வள்ளி, அம்பாளுடன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிதக்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், பொறுப்பு இணை கமிஷனர் ஞானசேகரன் செய்தனர்.