நிலத்தில் இருந்து சாமி சிலை முளைத்ததாக திருப்பூரில் நாடகம்: பொதுமக்கள் முற்றுகை!
திருப்பூர் :திருப்பூரில், நிலத்தில் இருந்து சுவாமி சிலை வந்ததாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில், சொத்தை கைப்பற்ற நடத்தப்பட்ட நாடகம் என தெரியவந்ததை தொடர்ந்து, சிலையை தோண்டி எடுத்தனர்.திருப்பூர், பிராசரர் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி, 45; இவரது வீட்டில் வைத்திருந்த அரிசி மூட்டைக்கு கீழ், நிலத்திலிருந்து புற்றுக்கண் மற்றும் எல்லம்மன் சிலை வெளியே வந்ததாக தெரிவித்தார்.இச்செய்தி பரவியதையடுத்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து, வழிபட்டு சென்றனர். அவரது அண்ணன் சின்னசாமி, சுவாமி அருள் வந்ததாக கூறி, பக்தர்களுக்கு திருநீறு கொடுத்து வந்தார். சுற்றிலும் புற்று அமைப்போடு, அம்மன் சிலை புதிதாக கான்கிரீட்டில், கோவில் கோபுரங்களில் வைக்கப்படும் சுதைபோல் காணப்பட்டது. சின்னசாமி ’உனது வீட்டிற்குள் எல்லம்மன் வந்துள்ளார்; சென்று பார்,’ என கூறியுள்ளார்.இதற்கு அவரது தங்கை ஜெயா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், ”வீட்டை அபகரிக்க, சின்னசாமியும், பழனிசாமியும் நாடகமாடுகின்றனர். திடீரென எப்படி சுவாமி சிலை முளைக்கும்; மோசடி செய்கின்றனர்,” என்றார்.இத்தகவல் கிடைத்ததும், வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் குழி தோண்டி, புதிதாக கான்கிரீட் போட்டு, சிலையை வைத்து சுற்றிலும், புற்றுபோல் மண் அமைத்துள்ளனர். வீட்டை அபகரிக்கவே நாடகமாடியுள்ளனர் என தெரிந்தது. சிலையை போலீசார் தோண்டி எடுத்து, வீட்டில் வைத்து பூட்டினர். பின், பொதுமக்களை ஏமாற்றி, பரபரப்பை ஏற்படுத்திய சின்னசாமி, பழனிசாமி ஆகியோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.