மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம்!
ADDED :4066 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்., 9 வரை நடக்கிறது. தினமும் சுவாமியின் திருவிளையாடல் லீலைகள் நடக்கும். திருவிழாவை முன்னிட்டு, கோவில் கம்பத்தடி மண்டபம் அருகே, 47 அடி உயர தங்கக்கொடி மரத்தில், நேற்று காலை, 9:35 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்யப்பட்டது. சுவாமி பிரியாவிடையுடன் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் வலம் வந்தார். தங்கக்கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஓராண்டு நிறைவு நாளான நேற்று, கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி, செப்., 4ம் தேதி, புட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு, புட்டுத்தோப்புக்கு சென்று, அங்கு, ’புட்டு உற்சவம்’ நடக்கும்.