26 கோவில்களில் மழை வேண்டி வருண யாகம்!
மழை வேண்டி, 26 கோவில்களில் வருண யாகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்துசமய அறநிலைய துறை தன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மழை வேண்டி வருண யாகம் நடத்த தெரிவித்திருந்தது.இதை தொடர்ந்து, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, திருப்போரூர் வட்டங்களில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள, 26 கோவில்களில் நேற்று வருண யாகம் நடந்தது.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், வல்லிபுரம் காலகண்டீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவில், விளாகம் கரியமாணிக்க பெருமாள் கோவில் உட்பட, பிரசித்தி பெற்ற கோவில்களில், நேற்று வருண யாகம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். திருப்போரூர் சரவண பொய்கை குளத்திற்குள் அர்ச்சகர்கள் நின்று மழை வேண்டி ஜெபம் செய்தனர். காவடி மண்டபத்தில் தனசேகரன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரியும் நடத்தப்பட்டது.கடந்த ஜூன் மாதம், அறநிலையத் துறை கோவில்களில், மூன்று நாள் வருண ஜெபம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.