உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்!

திருப்பூர் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்!

திருப்பூர் : இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை விசர்ஜனம் ஊர்வலம், பலத்த பாதுகாப்புடன், திருப்பூரில் நேற்று நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூரில் நேற்று இந்து முன்னணி சார்பில், 750 இடங்களில், கடந்த 29ம் தேதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 400 விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம், நேற்று மாலை 5.00 மணியளவில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கியது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிஷோர் குமார் தலைமை வகித்தார். கோட்ட பொது செயலாளர் செந்தில் குமார், சம்பத் குமார், செந்தில் துவக்கி வைத்தனர்.

27வது ஆண்டாக நடக்கும் சதுர்த்தி விழாவை குறிக்கும் வகையில், 27 பேர் பங்கேற்ற கொடி அணி வகுப்பு நடைபெற்றது. மகாபாரத போர் காட்சிகளை விளக்கும் வகையில், கிருஷ்ணன் சாரதியாக இருந்து, அர்ஜூனனை வழிநடத்தும் காட்சி, சிங்கத்தின் மீது நின்ற கோலத்தில் வரும் விநாயகர் என கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரதங்கள், ஊர்வலத்தில் இடம் பெற்றன. 60 அடி ரோடு, கொங்கு மெயின் ரோடு, மில்லர் ஸ்டாப், பி.என்.,ரோடு, மேம்பாலம் வழியாக சென்று, பொதுக்கூட்டம் நடக்கும் ஆலங்காட்டை வந்து சேர்ந்தது.

திருப்பூர் தெற்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விசர்ஜன ஊர்வலம் துவக்க விழா, கே.செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட சிலைகள், வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. ஊர்வலத்தை இந்திய தொழில் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா சண்முகம் துவக்கி வைத்தார். பத்மநாபன், மயில் வாகன விநாயகருக்கு பூஜை செய்தார். கோவை ஆர்.எஸ்.எஸ்., விபாக் சங்க சலாக் பழனிச்சாமி தலைமையில், பக்தர் பேரவை மாநில செயலாளர் ராமசாமி, பா.ஜ., மாவட்ட தலைவர் மணி, இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம், ரத்தினசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஊர்வலம் புதூர் பிரிவு, பெரிச்சிபாளையம், திரு.வி.க., நகர், வெள்ளியங்காடு நால் ரோடு, தென்னம்பாளையம், ஆர்.வி.இ, லே-அவுட், டி.கே.டி., பஸ் ஸ்டாப், பழைய பஸ் ஸ்டாண்ட், பூக்கடை முக்கு, டைமண்ட் தியேட்டர் வழியாக ஆலாங்காடு சென்றடைந்தது. போலீஸ் உதவி கமிஷ்னர் முத்துசாமி தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் வந்த வழித்தடத்தில், தெருவிளக்குகள் எரியாமல் இருந்தன. அதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. விசாரித்ததில், டிரான்ஸ்பார்மர் பழுது என்பது தெரியவந்ததால், ஊர்வலம் தொடர்ந்தது. மேற்கு ஒன்றிய அளவில் நடந்த விசர்ஜன ஊர்வலம், செல்லம் நகர் பிரிவில் துவங்கியது. 50 சிலைகள் ஊர்வலத்துக்கு எடுத்து வரப்பட்டன. தொண்டரணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணை தலைவர் அண்ணாதுரை ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊர்வலம், கே.எஸ்.சி., பள்ளி வீதி, வேப்பங்காடு பங்களா, மேற்கு பிள்ளையார் கோவில் வழியாக ஆலங்காடு வந்தடைந்தது.

மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் குணசேகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விசர்ஜன ஊர்வலத்தை ஒட்டி, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முக்கிய இடங்கள் "சிசி டிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. பதற்றமானவை என கண்டறியப்பட்ட பெரியதோட்டம் , கே.என்.பி., காலனி பகுதிகளில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பல்லடம்: பல்லடத்தில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது. 42 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், நேற்று மாலை, என்.ஜி.ஆர்., ரோட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மணி தலைமை வகித்தார். கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். வடுகபாளையம், மின் நகர், பனப்பாளையம், பச்சாபாளையம் வழியாக சென்று, சாமளாபுரம் குளத்தில், சிலைகள் கரைக்கப்பட்டன.

தாராபுரம்: தாராபுரத்தில், இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 162 சிலைகள், நேற்று விசர்ஜனம் செய்யப்பட்டன. அமராவதி அம்மன் சிலை அருகே துவங்கிய ஊர்வலத்துக்கு, மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். பா.ஜ., பாராளுமன்ற செயலாளர் சண்முகநாதன், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பொள்ளாச்சி ரோடு, ஜவுளி கடை வீதி, பள்ளி வாசல் வீதி, சோளக்கடை வீதி வழியாக சென்று, ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள அமராவதி ஆற்றில், விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

உடுமலை: உடுமலை, குறிச்சிக்கோட்டை, பெதப்பம்பட்டி, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், இந்து முன்னணி சார்பில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இச்சிலைகளுக்கு, கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தன. சிலைகள், நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை, மாநில முன்னாள் துணை தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர், ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். கல்பனா ரோடு, கச்சேரி வீதி, குட்டைத்திடல் வழியாக, மாரியம்மன் கோவிலை ஊர்வலம் வந்தடைந்தது. அங்கிருந்து பழநி ரோடு வழியாக, மடத்துக்குளம் அமராவதி ஆற்றில், சிலைகள் கரைக்கப்பட்டன. உடுமலை டி.எஸ்.பி., பிச்சை தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !