உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி தீமிதி திருவிழா

மழை வேண்டி தீமிதி திருவிழா

ஓசூர்: ஓசூரை அடுத்த சூளகிரி பகுதியில், மழை வேண்டி தீமிதி திருவிழா நடந்தது. இதில், ஏழு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாய தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டம் அதாள பாதாளத்துக்கு சென்று விட்டது. குடிப்பதற்கு கூட, தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பண்டைய கால பழக்க வழக்கங்களை, பின்பற்ற துவங்கிய பொதுமக்கள், மழை வேண்டி, தவளை, நாய், கழுதை போன்ற விலங்குகளுக்கு திருமணம் செய்து வைத்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, மழை வேண்டி, வருண பகவானின் அருளை பெறும் வகையில், ஓசூரை அடுத்த சூளகிரி, ராமநாயக்கன்பேட்டை, கிருஷ்ணாபுரம், போகிபுரம், அலகுபாபி, சின்னகாமநாயக்கன்பேட்டை, பீரேபாளையம் ஆகிய, ஏழு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, கடந்த, 18ம் தேதி, மழை ராயன் சாமியை களிமண்ணால் செய்தனர்.

அந்த சிலையை, தூக்கி கொண்டு, ஏழு கிராமங்கள் தோறும் செல்ல, பக்தர்களை தேர்வு செய்ய முடிவு செய்த பொதுமக்கள், பெண் சாமி ஒருவர் குறி சொன்னதன் அடிப்படையில், சூளகிரி கீழ்தெருவை சேர்ந்த சசி, 18, உள்பட, ஐந்து பேரை தேர்வு செய்தனர்.இவர்கள் அனைவரும், சூளகிரி பகுதியில் உள்ள உள்ளூர் கோவிலில், தங்க வைக்கப்பட்டு, ஏழு நாட்களுக்கு சாமிக்கு பூஜை செய்ய தயார் செய்யப்பட்டனர். மழை ராய சாமியை தலையில் சுமந்து கொண்டு, தினமும் ஒவ்வொறு கிராமமாக ஏழு கிராமங்களுக்கு சென்ற பக்தர்கள், "மழை தருவாய் மழை ராய சாமி, பூச்செடிகள் காய்ந்து போச்சு, மழை ராய சாமி என, பக்தி கோஷம் எழுப்பியவாறு சென்றனர். மேலும், ஏழு கிராமங்களில் உள்ள வீடுகளில், தானமாக வழங்கப்பட்ட அரிசி, பருப்பு ஆகியவற்றை, பக்தர்கள் பெற்றுக்கொண்டனர். இறுதியாக, கடந்த, 25ம் தேதி வியாழக்கிழமை, சூளகிரி பகுதியில் உள்ள சடைமுனீஸ்வரன் கோவில் முன்பு, மழை வேண்டி தீமிதி திருவிழா நடந்தது. இதைத்தொடர்ந்து ஏழு கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்ட உணவு பொருட்களில், சமையல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், ஏழு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !