குக்கே சுப்ரமண்யா கோவில் வருமானம் உயர்வு!
பெங்களூரு : குக்கே, சுப்ரமண்யா கோவிலின் நடப்பு ஆண்டு வருமானம், 88 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், குக்கே, சுப்ரமண்யா கோவில் பிரசித்தி பெற்றது. கடந்தாண்டு, இக்கோவிலின் வருமானம், 66 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு, 2013 - -14ம் ஆண்டு, இக்கோவிலின் வருமானம், 68 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பக்தர்கள் எண்ணிக்கை இக்கோவிலின் பக்தர்களாக, பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். தோஷ பரிகாரத்துக்காக, இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வருவாயும் உயருகிறது. வருவாயில், இக்கோவில், மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது. கர்நாடகம் - -தமிழகம் எல்லை மாவட்டமான சாம்ராஜ் நகரில், மலைகளுக்கு நடுவில் இருக்கும், ’மலே மகாதேஸ்வரா’ கோவில், இந்தாண்டு, 53 கோடி ரூபாய் வருவாய் பெற்றதன் மூலம், இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்தாண்டு, இக்கோவிலின் வருவாய், 35 கோடி ரூபாயாக இருந்தது. உடுப்பி மாவட்டம், கொல்லூர் மூகாம்பிகை கோவில், 26 கோடி ரூபாய் வருவாய் பெற்றதன் மூலம், மாநிலத்தில், மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்தாண்டு, இக்கோவிலின் வருமானம், 23 கோடி ரூபாயாக இருந்தது. மைசூரு, சாமுண்டீஸ்வரி கோவில், 15 கோடி ரூபாயும், நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா கோவில், 14 கோடி ரூபாயும் வருவாய் பெற்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளதாக, அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறநிலைய துறை கமிஷனர் பல்லவி அவுரத் கூறுகையில், ”அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில், 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் பெறும் கோவில்களின் பாதுகாப்பு கருதி, ’சிசிடிவி’ கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு, கூடுதலான அடிப்படை வசதிகளை செய்து தரவும் ஆலோசிக்கப்படு கிறது,” என்றார்.