இடிந்து விழும் நிலையில் கோவில் கோபுரம்!
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் சாலை அருகே உள்ள காளிகோபுரம், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், நகரவாசிகள் அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். திருத்தணி நகராட்சி, 12வது வார்டில் அமைந்துள்ளது இந்திரா நகர். இந்த நகர் வழியாக முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்காக, பாதை அமைக்கப்பட்டது. நுழைவாயிலில், 75 ஆண்டுகளுக்கு முன், காளிகோபுரம் அமைக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் முறையாக கோபுரத்தை பராமரிக்காததால், தற்போது கோபுரம் மீது ஆலமரச் செடிகள் வளர்ந்துள்ளன. கோபுரத்தின் பல பகுதிகளில் விரிசல் விட்டுள்ளது. இந்த கோபுரத்தின் வழியாக, தற்போது பக்தர்கள் செல்வதில்லை. இருந்தாலும், இந்திரா நகர் வாசிகள் சிலர் மட்டும் அவ்வப்போது இந்த வழியாக கோவிலுக்கு செல்கின்றனர். முதியவர்கள், கட்டடப் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், இரவு நேரத்தில் கோபுரத்தின் கீழ் தங்கி செல்கின்றனர். கோபுரம் அருகில் வீடுகள் உள்ளன. எனவே, கோவில் நிர்வாகம் பழுதடைந்த காளி கோபுரத்தை சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து தள்ள வேண்டும் என, இந்திரா நகர்வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.