வத்திராயிருப்பு சிவன் கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு
வத்திராயிருப்பு : சிவபெருமானுக்கு உகந்த நாளான ஐப்பசி பவுர்ணமி விழா வத்திராயிருப்பு பகுதி கோயில்களில் விமரிசையாக நடந்தது. இங்குள்ள சேனியர்குடி மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. நித்திய பூஜைக்கு பின் சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. 11 படி சாதத்தால் மூலவரான சொக்கநாதருக்கு கவச வடிவில் அன்னத்தால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் சந்தனாபிஷேகம் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கும் பரிவார தெய்வமான மாரியம்மனுக்கும் இரவு பவுர்ணமி பூஜை நடந்தது. * மூவரைவென்றான் மரகதவல்லி சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு தேவார பாடல்களுடன் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. மாலையில் அன்னாபிஷேக பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். * வத்திராயிருப்பு விசாலாட்சி உடணுறை காசிவிஸ்வநாதர் கோயிலில் நடந்த அன்னப்படையல் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வழிபாட்டை தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.