சபரிமலையில் டிச.25 வரை மூன்று மணிக்கு நடைதிறப்பு!
சபரிமலை: டிச.25 வரை தினமும் மாலையில் மூன்று மணிக்கு சபரிமலை நடை திறக்கும் என்று சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கூறினார். சபரிமலையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான பல்வேறு வசதிகள் பற்றி ஆராயப்பட்டது. பின்னர் ஜெயக்குமார் கூறியதாவது:கூட்டத்தை பொறுத்து நடை திறக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி டிச.25 வரை தினமும் மாலை 3 மணிக்கு நடைதிறக்கும். காலையில் நடை திறக்கும் நேரம் தொடர்பாக அந்தந்த நாட்களில் இருக்கும் கூட்டத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும். புல்மேடு பாதையில் வரும் பக்தர்கள் வசதிக்காக வழிகாட்டி பலகைகள் வைக்கப்படும். ஆபத்தான இடங்களில் கயிறு கட்டப்படும். ஆக்சிஜன் பார்லர்களில் சிகிச்சை பெற வருபவர்களுக்காக கட்டில் போடப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., கவரேஜ் வசதிக்காக புதிய டவர் அமைக்க வனத்துறையிடம் நிலம் கேட்டு பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தற்காலிக ஆஸ்பத்திரி: பம்பை - சன்னிதானம் பாதையில் சரல்மேட்டில் புதிய தற்காலிக மருத்துவமனையை ஜெயக்குமார் திறந்து வைத்தார். இங்கு இதயநோய் சிகிச்சைக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.பஸ் வருமானம் அதிகரிப்பு: சபரிமலை சீசன் காலத்தில் கேரள அரசு போக்கவரத்துக்கழகத்துக்கு கடந்த ஆண்டுகளைவிட வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த 17 நாட்களில் நிலக்கல் சர்வீசில் மட்டும் ஒரு கோடியே 99 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 46 லட்சம் ரூபாய் அதிகமாகும். தொலைதூர சர்வீஸ்களில் கடந்த ஆண்டை விட 56 சர்வீஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளது.