திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்.. பக்தர்கள் பரவசம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை பரணி தீபம் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்றப்பட்டது. தீபம் காண பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணதிர ஒலித்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொண்டாடப்படும் கார்த்திதை தீப திருவிழாவில் இன்று காலை 4மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாலை 2ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது, இதனை காண திருவண்ணாமலையில் 15லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனை முன்னிட்டு அதிகாலை 2மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சசண்டிகஸ்வரர், ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை 03.27 மணிக்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப விழாவின் 10 ஆம் நாளில் அதிகாலை நான்கு மணிக்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஸ்வாமி சன்னதி அருகே பரணி தீபத்தை பாஸ்கரன் குருக்கள் கையிலேந்தியவாறு முதல் பிரகாரத்தை வலம் வர அப்போது பக்தர்கள் பரவசத்துடன் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.