உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹர ஹர மகாதேவா, சம்போ சிவசங்கரா: சிவாலயங்களில் கூட்டம்!

ஹர ஹர மகாதேவா, சம்போ சிவசங்கரா: சிவாலயங்களில் கூட்டம்!

பெங்களூரு: மகா சிவராத்திரியை முன்னிட்டு, பெங்களூரு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், அபிஷேகங்கள் நடந்தன. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று அதிகாலையிலிருந்தே, பெங்களூருவிலுள்ள பல்வேறு கோவிலுக்கு சென்று, சிவபெருமானை பக்தர்கள் தரிசித்தனர். அதிகாலையிலிருந்தே கோவில்களில், மணி ஓசை கேட்க துவங்கியது.
பக்தி பரவசம்:சிவன் கோவில்களில், சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தவுடன், பக்தர்கள் பக்தி பரவசத்தில், ஹர ஹர மகாதேவா, சம்போ சிவசங்கரா என்று, பக்தி முழக்கமிட்டனர். அனைத்து சிவன் கோவில்களிலும், ருத்ராபிஷேகம், பாலாபிஷேகம், ருத்ரஹோமம், வில்வ அர்ச்சனை, மஹா மங்களார்த்தி உட்பட பல அர்ச்சனைகள் நடந்தன; பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. ஹலசூரு சோமேஸ்வர், பசவனகுடி கவி கங்காதேஸ்வரர், மல்லேஸ்வரம் காடு மல்லேஸ்வரா, நாகரபாவி சாம்ராஜ்பேட்டை மலை மகாதேவஸ்வரா, ஹலசூரு சோமேஸ்வரா, வசந்த் நகர் மஞ்சுநாதர் சுவாமி, வண்ணார்பேட்டை காசி விஸ்வநாதர் உட்பட வெவ்வேறு சிவன் கோவில்களில், நேற்று அதிகாலையிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சிவபெருமானை தரிசித்தனர்.

இசை நிகழ்ச்சி:இரவு முழுவதும், கோவில்களில், பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாதஸ்வரம், பஜனை, பக்தி பாடல்கள், சிவ சகஸ்ரநாமம், புல்லாங்குழல் உட்பட இசை நிகழ்ச்சிகளும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !