கும்பகோணம் மகாமக குளத்தில் ஓராண்டுக்கு புனித நீராடலாம்!
கும்பகோணம்: ""இளைய மகாமகம் தொடங்கி, மகாமகம் வரை, ஓராண்டுக்கு, பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடலாம், என ராமானந்த பாரதி தீர்த்த சுவாமிகள் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக திருவிழாவையொட்டி, கடந்த, 3ம் தேதி தேரோட்டம் நடந்தது. இளைய மகாமகத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி, நேற்று முன்தினம் நடந்தது. அஸ்திரதேவருக்கு பல்வேறு அபிஷேகம் செய்து, காலை, 11.55 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி கண்ட பின், குளக்கரையில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட்டி, ஸவாமியை வழிபட்டனர். இளைய மகாமக திருவிழாவை முன்னிட்டு, புனித நீராடுவதற்காக, விசாகப்பட்டிணத்திலிருந்து கும்பகோணத்திற்கு வந்த, விசாகப்பட்டிணம் மௌலானந்த தபோவனத்தின் பீடாதிபதி ராமானந்த பாரதி தீர்த்த சுவாமிகள் கூறியதாவது:வரும், 2016ம் ஆண்டு, கும்பகோணத்தில் மகாமக திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக, இளைய மகாமக திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. இளைய மகாமக திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. இன்றிலிருந்து அடுத்த ஆண்டு, 2016ம் ஆண்டு வரை மகாமக திருவிழா ஆண்டு தான்.
கும்பகோணத்தில், 21 நதிகளின் புனித நீர் இந்த குளத்தில் சங்கமம் ஆகிறது, என பவிஷ்ய புராணம் தெரிவிக்கிறது. எனவே, மகாமக திருவிழா வரை, எந்த ஒரு நாளிலும் கும்பகோணத்திற்கு வந்து, புனித நீராடினால், மகாமக தீர்த்தவாரியில் நீராடும் மகாபுண்ணியம் கிடைக்கும். மேலும், இக்குளத்தை சுற்றினாலே பாவம் விலகிவிடும்.இயற்கை சீற்றங்கள் அதிகமாக அச்சுறுத்துவதால் உலக நன்மை கருதி யாகங்கள், சிறப்பு வழிபாடுகள், லலிதா சகஸ்ரநாமம், அன்னதானம் போன்றவற்றை செய்ய வேண்டும். இந்த விழாவை முன்னிட்டு, மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம், இயற்கை சீற்றங்களின் வேகத்தை சாந்தியடைய செய்ய முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, ஆன்மிக பேரவை தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சிவசுப்ரமணியன், பேரவை நிர்வாகி ரவிநாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.