ராமநாதபுரத்தில் பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிப்பு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே, செங்க மடையில், 3,000 ஆண்டு பழமையான பெருங்கற்கால சின்னங்களும், முதுமக்கள் தாழியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில், கி.பி., 1711 முதல் 1725 வரை ஆட்சி செய்த விஜய ரகுநாத சேதுபதி, பிரெஞ்சு வல்லுனர்களை கொண்டு வட்ட வடிவ கோட்டைகளை கட்டினார். அதில் ஒன்றான கமுதிக்கோட்டை, தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. மற்றொன்று, ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து, மூன்று கி.மீ., தொலைவில் செங்கமடையில் உள்ளது. செங்கமடை கோட்டையில், ராமநாதபுரம் அரண்மனை காப்பாட்சியர் சக்திவேல், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, முதுமக்கள் தாழிகள் (இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் பெரிய பானை), பழங்காலத்தில் இறந்தவர்களை, பெரி கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள், மண் குவளைகள், குவளை தாங்கிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இது, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என, தொல்லியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.