புன்னைநல்லூர் முத்துமாரி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்!
தஞ்சாவூர்: மாசி மகத்தையொட்டி, புன்னைநல்லூர் முத்துமாரி அம்மன் கோவிலில், 1,008 பால் குடங்கள் பவனி மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தஞ்சை மாவட்டம், புன்னைநல்லூர் முத்துமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கும். நேற்று, மாசி மகம் என்பதால், அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, 1,008 பால்குடங்கள் பவனியாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கைலாசநாதர் கோவில் முன்பிருந்து புறப்பட்ட பக்தர்களின் பால்குட பவனி, நான்கு ராஜவீதிகள் வழியாக, அம்மன் சன்னதியை அடைந்தது.பாலாபிஷேகத்தை தொடர்ந்து, அம்மனுக்கு சந்தணக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.பக்தர்கள் அனைவருக்கு, மாரியம்மன் கோவில் சுக்ரவார வழிபாட்டுக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.