பிள்ளையார்பட்டியில் 1008 கலசாபிஷேகம்: மார்ச் 9ல் துவக்கம்!
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பின் 1008 கலசாபிசேகம் மார்ச் 9ல் துவங்குகிறது. உலக சேமத்திற்காக , கற்பகவிநாயகருக்கு நடைபெற உள்ள இந்த 1008 கலசாபிசேகத்தில், சிவாச்சாரியர்கள்,வேத விற்பன்னர்கள், திருமுறையார்கள், நாதஸ்வர,மேள இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். மார்ச் 9ம் தேதியன்று காலை 7 மணிக்கு, அனுக்ஞை, கணபதிஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. மாலை 4 மணிக்கு பிரதான கலச ஸ்தாபனமும், முதற்கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகின்றன. 2-ம் நாளில், காலை 8.45 மணிக்கு இரண்டாம் காலயாகபூஜை, மாலை 6 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜையும், 3-ம் நாளில் காலை 9.05 மணிக்கு நான்காம் காலயாகபூஜை,மாலை 6 மணிக்கு ஐந்தாம் காலயாக பூஜையும், நிறைவு நாளாக மார்ச் 12, காலை 5.45 மணிக்கு ஆறாம் காலயாக பூஜையும், தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெறும்.காலை 9 மணிக்கு கற்பக விநாயகருக்கு கலசாபிசேகம் நடைபெறும்.பகல் 12.30 மணிக்கு அபிசேகமும், மாலை 6 மணிக்கு கற்பகவிநாயகர்,சண்டீஸ்வரர் திருவீதி உலாவும் நடைபெறும்.ஏற்பாட்டினை நிர்வாக அறங்காவலர்கள் அரு.நாராயணன் செட்டியார்,காரைக்குடி வீர.முத்துக்கருப்பன் செட்டியார் செய்கின்றனர்.