சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா துவக்கம்!
திருச்சி: தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்க, சமயபுரம் மாரியம்மன், ஆண்டு தோறும், மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை, 28 நாட்களுக்கு, பச்சை பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம். இந்த காலத்தில், அம்மனுக்கு தளிகை நெய்வேத்யம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நெய்வேத்யம் செய்யப்படுகிறது. இந்த விரத காலத்தின் துவக்கத்தில், அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடக்கும். இந்தாண்டு, பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜை முடித்து, மாரியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா துவங்கியது.கோவில் முன் மண்டபத்தில் இருந்து காலை, 9.30 மணிக்கு, யானைகள் புடை சூழ, மேளதாளத்துடன் பூ கூடைகள் எடுத்து, தேரோடும், மூன்று வீதிகள் வழியாக சுற்றி வந்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. பூச்சொரிதலுக்கான முதல் கூடை பூ, தேவஸ்தானம் சார்பில் போடப்பட்டது. அதன் பின், பக்தர்கள் கொண்டு வந்த தாமரை, மல்லி, மகிழம்பூ, மரிக்கொழுந்து, தாழம்பூ, ரோஜா, முல்லை உள்ளிட்ட பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று மாலை, கோவிலுக்கு பாத்தியப்பட்ட மருதூர், மகாளிகுடி, வி.துறையூர், பணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அம்மனுக்கு மேள தாளத்துடன் பூ கொண்டு வந்தனர். இதே போல், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், அம்மனுக்கு பூ கொண்டு வந்து, செலுத்தினர். பூச்சொரிதலை முன்னிட்டு, மாரியம்மனுக்கு நேற்று காலை மட்டும், ஐந்து டன்னுக்கு மேல் பூக்கள் போடப்பட்டுள்ளது. பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வசதியாக விடிய விடிய நடை திறந்திருந்தது. நேற்றிலிருந்து இன்று மதியம் வரை, கட்டணம் இல்லா தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு, 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களை கண்காணிப்பதற்காக, கோவிலின் உள் பகுதியில், 32 இடங்களிலும், வெளி பகுதியில், 12 இடங்களிலும் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. ஏழு இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, ஆட்டுச்சந்தை, வி.துறையூர் சாலை, மணச்சநல்லூர் சாலை ஓம்சக்தி நகர் ஆகிய இடங்களில், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. நெம்பர் 1 டோல்கேட்டில் இருந்து, ஆதி மாரியம்மன் கோவில் வரை, 42 இடங்களில் பக்தர்களுக்காக டேங்க் அமைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பூச்சொரிதல் விழா வரும், 15, 22, 29ம் தேதிகளிலும் நடக்கிறது. பூச்சொரிதல் விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் தர்மர், மணியம் ரமணி உட்பட கோவில் பணியாளர்கள் செய்தனர்.