முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கோலாகலம்
ராசிபுரம் : ஏப்ரல், 3ம் தேதி, பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரன் கோவில்களில், விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகள் கோலாகலமாக நடக்கிறது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், வரும், ஏப்ரல், 3ம் தேதி, பங்குனி உத்திர விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கிறது. அதன்படி, நாமக்கல் பாலதண்டாயுதபாணி, கூலிப்பட்டி முருகன் கோவில், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில், பேளுக்குறிச்சி கூவன்மலை பாலசுப்ரமணியார் கோவில், கடந்தப்பட்டி முத்துக்குமரன் கோவில், குருசாமிபாளையம் சுப்ரமணியர் கோவில், கபிலர்மலை பாலசுப்ரமணியா கோவில், மோகனூர், காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில், சிறப்பு ஏற்பாடு நடக்கிறது.அதேபோல், சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில், ராசிபுரம் கைலாசநாதர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில், மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவில், ப.வேலூர் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகன் ஸ்வாமிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கும்.ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், பாலதண்டாயுதபாணி பக்தர்கள் குழு சார்பில், கல்யாண உற்வச விழா, 28வது முறையாக, வரும், ஏப்ரல், 3ம் தேதி விழா நடக்கும். முன்னதாக, ஏப்ரல் 2ம் தேதி, ஆறுமுக ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ரதத்தில் திருவீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 3ம் தேதி காலை, 8 மணிக்கு பால்குடம் ஊர்வலம், 10.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், பாலதண்டாயுதபாணி ஸ்வாமிக்கு வெள்ளி கவச அலங்காரம், ஆறுமுக சுப்ரமணிய ஸ்வாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 12 மணிக்கு, ஆறுமுக சுப்ரமணிய ஸ்வாமி, வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகளுக்கு கல்யாணம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு ஸ்வாமி மயில் வாகனத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ராஜவீதி வழியாக திருவீதி உலா நடக்கிறது. 4ம் தேதி காலை, 10 மணிக்கு வசந்த விழா நடக்கிறது.