5 ஆயிரம் கி.மீ., பாத யாத்திரை செல்லும் கேரளா தம்பதிகள் ராமேஸ்வரம் வருகை
ராமேஸ்வரம்: சபரிமலையில் இருந்து காசிக்கு 5 ஆயிரம் கி.மீ., தூரம், பாத யாத்திரை மேற்கொண்டுள்ள கேரள தம்பதிகள் ராமேஸ்வரம் வந்தனர்.
கேரளா பந்தலூரைச் சேர்ந்தவர் மணி,68. இவரது மனைவி சரஸ்வதி அம்மாள்,58. ஐயப்ப பக்தர்களான இவர்கள், சபரிமலைக்கு வருவோருக்கு குடிநீர் வசதி, தங்கும் வசதிகள் செய்து கொடுத்து வருகின்றனர்.
அலங்கார சிறிய தேருக்குள் ஐயப்பன் கோயில் போல் வடிவமைத்து, கேரளா பந்தளம் நகரில் இருந்து மார்ச் 5 ல், யாத்திரையை துவக்கிய இவர்கள், நேற்று ராமேஸ்வரம் வந்து ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர். இன்று காசிக்கு யாத்திரை புறப்படுகின்றனர். இவர்கள், காசியில் சுவாமியை தரிசித்து விட்டு, மீண்டும் பாத யாத்திரையாக சபரிமலைக்கு வர உள்ளனர்.இதுகுறித்து மணி கூறியதாவது:ஐயப்பன் பக்தரான நான், அவரது புகழை வட இந்தியாவிலும் பரப்பும் வகையில், 5 ஆயிரம் கி.மீ., தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறேன். இப்பயணம் ஓராண்டு வரை நீடிக்கும். வழியில் பக்தர்கள் நன்கு உபசரித்து வழியனுப்புகின்றனர், என்றார்.