தென்மாவட்டங்களில் 3ம்தேதி சாஸ்தா குலதெய்வ வழிபாடு!
திருநெல்வேலி : தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்ற பங்குனிஉத்திர விழாவையொட்டி கிராம சாஸ்தா கோயில்கள் களைகட்டுகின்றன.
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பங்குனிஉத்திர சாஸ்தா வழிபாடு பாரம்பரியத்துடன் நடக்கிறது. வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.
சாஸ்தா எனப்படும் அய்யனார் வழிபாடு அனைத்து சமூகத்தினருக்குமானது. ஒரே கோயிலில்
பல்வேறு சமூகத்தினரும் வழிபாடு நடத்துகின்றனர். தந்தைவழியில் பாரம்பரியமாக வழிபடுவதால் தங்களின் மூதாதையர்களின் உறவினர்களை இங்கு காண இயலும். பங்காளியான சொந்தபந்தங்களை ஆண்டுக்கு ஒருமுறை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
நெல்லையில் நடுக்காடுடையார் சாஸ்தா, மருகால்தலையில் பூலுடையார்சாஸ்தா, பிரான்சேரி கரையடிமாடன் கோயில் போன்றவற்றில் ஏராளமான மக்கள் வழிபடுவார்கள்.இந்த விழாவிற்காக பிழைப்பிற்காக வெளிமாநிலங்களில் வசிப்போரும் கூட உத்திரத்தன்று வழிபாட்டிற்கு வந்துவிடுவார்கள்.இந்த விழாவிற்காக சிறப்பு பஸ்வசதியினை அரசு போக்குவரத்து அதிகாரிகள் செய்துள்ளனர். ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமியின் குலதெய்வக்கோயில் சாந்திநகர் நடுக்காடுடையார் சாஸ்தா கோயிலாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் வழிபாட்டிற்கு இங்கு வந்துசென்றார்.