உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் லிங்கம் மீது சூரிய ஒளிபரவசத்துடன் குவிந்த பக்தர்கள்

கோவில் லிங்கம் மீது சூரிய ஒளிபரவசத்துடன் குவிந்த பக்தர்கள்

சென்னிமலை: சென்னிமலை அருகே, பழமையான ஈஸ்வரன் கோவில் லிங்கத்தின் மீது, சூரிய ஒளி பட்டதால், பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ளது பிரம்மலிங்கேஸ்வரர் கோவில். பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில் கல்வெட்டில், 1,200 ஆண்டுகளுக்கு முன்பு, சுந்தரபாண்டியன் என்ற மன்னன் பல்வேறு திருப்பணிகள் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இக்கோவிலில், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, வரும் மே முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாலை, 5.10 மணியளவில் கோவிலில் உள்ள லிங்கம் மீது, சூரிய ஒளி பட்டு வருவதை, அங்கு வேலை செய்த பணியாளர்கள் கண்டனர். இதுபற்றி அறிந்த மக்கள் பரவசம் அடைந்து, லிங்க வடிவிலான சிவபெருமானை, ஒளி மூலம், சூரிய பகவான் வழிபடுவதாக பக்தர்கள் கருதுகின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், 3 நாட்கள் மட்டும், மாலை நேரத்தில், 30 வினாடிகள், இந்த லிங்கம் மீது சூரிய ஒளி படும். இதை காண பக்தர்கள் வருவதும் தரிசிப்பதும் வழக்கம். இந்தாண்டு, கடந்த சில நாட்களாக இதுபோன்ற நிகழ்வு நடக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !