மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த "கள்ளழகர்
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி கடந்த மே 3 ல் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர், மறுநாள் குதிரை வாகனத்தில் எதிர்சேவையில் காட்சியளித்து, வண்டியூரை அடைந்தார். அங்கிருந்து நேற்று முன்தினம் சேஷ வாகனத்தில் புறப்பட்டார். மட்டா மண்டகப்படியில் இரவு 8 மணிக்கு, மண்டூக (தவளை உருவம்) மகரிஷிக்கு, துர்வாச முனிவரால் ஏற்பட்ட சாபத்தை நீக்கி விமோசனம் அளித்தார். தொடர்ந்து வாணிய மண்டகப்படியில், இரவு 12 முதல் காலை 6 மணி வரை தசாவதார காட்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், அர்ச்ச, மச்ச, கூர்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, மோகினி அவதாரங்களில் அருள்பாலித்த பெருமாளை பக்தர்கள் விடிய, விடிய தரிசித்து பரவசமடைந்தனர். நேற்று இரவு கருட வாகனத்திலும், இன்று கிரி மண்டகப்படியில் ராஜாங்க திருக்கோலத்திலும், நாளை காலை 7 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் மீண்டும் "கள்ளழகர் திருக்கோலத்துடன், மேளதாளம் முழங்க, வான வேடிக்கையுடன் புஷ்பப்பல்லக்கில் வீதி வலம் வருகிறார். மாலை 5 மணிக்கு கோயிலை அடைகிறார்.