பூண்டி கும்பாபிஷேகம் யாகசாலை பணி தீவிரம்!
அவிநாசி: பூண்டி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, 22ல் மகா கணபதி ஹோமத்துடன் துவங்கி, 29 வரை நடைபெறுகிறது. 28அதிகாலை, 5:00 முதல், 6:00 மணிக்குள் பரிவார மூர்த்திகளின் கோபுரங்கள், சன்னதிகளில் கும்பாபிஷேகம் செய்விக்கப்படுகிறது. 29 காலை, 8:20 மணிமுதல், 9:20க்குள் திருமுருகநாத சுவாமி, ஸ்ரீசண்முகநாதர், அம்மன், நடராஜ பெருமான் உள்ளிட்ட சன்னதிகள், கோபுரங்களு க்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கோவில் அருகே பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கும் பணி, ஒன்றரை மாதமாக நடைபெற்று வருகிறது. திருமுருகநாத சுவாமிக்கு உத்தம பட்சமாக, 33 குண்டங்கள், அம்பாளுக்கு நவாக்னி எனப்படும் ஒன்பது, ஸ்ரீசண்முகநாத சுவாமிக்கு ஒன்பது, நடராஜருக்கு ஐந்து மற்றும் சண்டிகேஸ்வரர், 63 நாயன்மார், காலபைரவர், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு, 25 குண்டங்கள், என மொத்தமாக, 81ஹோம குண்டங்கள் அமைக்கப்படும். யாகசாலையில் குண்டம் அமைக்கும் பணி நிறைவுற்று, வண்ணம் தீட்டுதல், மேற்கூரை அலங்கரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணி ஒருவாரத்துக்குள் முடியும் என, செயல் அலுவலர் சரவணபவன் கூறினார்.