உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பீரம்: சோழ மன்னரால் கட்டப்பட்ட கற்றளி கோவில்!

கம்பீரம்: சோழ மன்னரால் கட்டப்பட்ட கற்றளி கோவில்!

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் கரைப்பகுதியில் பல சைவ, வைணவ கோவில்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாகவும், உறுதியாகவும், கலைநயத்துடன் உள்ள விசாலாட்சி அம்மன் உடனமர் காசி விசுவநாதர் கோவிலும், இதில் ஒன்று. சோழ மன்னர்கள் புதிய ஊர்கள் மற்றும் நகரங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். தென்கொங்கு பகுதியில் மட்டும், 20க்கும் மேற்பட்ட புதிய குடியிருப்புகளை சோழர்கள் உருவாக்கியதாக கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இதுபோன்ற குடி யிருப்புகள் "மங்கலங்கள் என அழைக்கப்பட்டன. இதன் அடிப்படையில், அமராவதி ஆற்றின் கரையில் உருவாக்கப்பட்ட குடியிருப்பு, குமரங்க பீமச்சதுர்வேதி மங்கலம் (இன்றைய குமரலிங்கம்) என அழைக்கப்பட்டது. இந்த குமரங்க பீம சதுர்வேதி மங்கலத்தில், சைவக்கோவிலை கற்றளி முறையில் (முழுவதும் கருங்கல்லால் ஆனது) அமைக்க திட்டமிட்ட முதல் வீர சோழன் (943-980 ), இக்கோவில் கட்டும் பணியை, தனக்கு கப்பம் கட்டி, கொங்கு பகுதியை ஆட்சி செய்து வந்த குமனமன்னன் பொறுப்பில் ஒப்படைத்தார்.

அம்மன்னன் மேற்பார்வையில், கோவில் கட்டுமான பணி நடந்தது. இக்கோவிலுக்கு தனி சிறப்பு வேண்டும் என்பதற்காக, இதன் மூலவர் சிலை (லிங்கம்) மற்றும் அம்மன் சிலை, காசியில் உள்ள கற்தச்சர்கள் மூலம் உருவாக்கப்பட்டு, வழிபாடு செய்து, அங்கிருந்து எடுத்து வரப்பட்டு, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சோழமன்னர் தலைமையில், கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் புதுப்பொலிவுடனும், உறுதியுடனும் இக்கோவில் காணப்படுகிறது. காசியில் இருந்து லிங்கம் எடுத்து வரப்பட்டதால், காசி விசுவநாதர் கோவில் என அழைக்கப்படுகிறது. கோவில் அமைக்கப்பட்ட பின், இப்பகுதியில், பள்ளிசந்தங்கள் (அறச்சாலைகள்), தேவதானங்கள் (பிராமணர் குடியிருப்பு), இதர மக்களுக்கான குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு, மங்கலங்கள் முழுமை பெற்றன. தற்போது, இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !