மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது..மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது!
தலைமுறை இடைவெளி காரணமாக குடும்பத்தில் பிணைப்பும், அன்பும் குறைய அனுமதிக்கக் கூடாது. அன்பே குடும்பத்தின் அஸ்திவாரம். மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியாவது போல, மனிதர்கள் மீது வைக்கும் அன்பே பாசமாக மாறும். பயம் என்பது அறவே கூடாது. மனதில் துணிச்சல் நிறைந்த இளமைக் காலமே, லட்சியம் நோக்கிய வெற்றிப் பயணத்திற்குஏற்றது. வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளைக் கண்டு கலங்க வேண்டாம். அவை தான், உந்துசக்தியாக இருந்து நம் வளர்ச்சிக்கு துணை செய்கின்றன. குடும்பத்தின் தலைவனாக தந்தை இருப்பது போல, இறைவன் நம் எல்லோருக்கும் தந்தையாக இருக்கிறார். நாம் அனைவரும் உடன் பிறந்தவர்கள்.சமுதாயத்தின் அடிப்படை குடும்பம். வீடு தான் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். பெற்றோரே அதன் ஆசிரியர்கள். பெற்றோருக்கும், பிள்ளைக்கும் உள்ள உறவு தெய்வீகமானது. அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக பிள்ளைகள் விளங்க, பெற்றோர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.பெற்றோர் குழந்தைகளுக்காக தினமும் சிறிது நேரம் செலவிடுவது அவசியம். இதனால் குழந்தைகளின் மனம் ஆரோக்கியமாக இருக்கும்.
நாளைய பொழுது நலமாக அமைய விரும்பினால், கண் முன் இருக்கும் இன்றைய கடமையை சரிவரச் செய்யுங்கள். நேற்றைய இளைஞர்கள் இன்றைய முதியவர்கள். இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள். இந்த உண்மையை உணர்ந்தால் பெரியவர்களை மதிக்கும் பண்பு உருவாகும்.மரியாதை என்பது தானாக கிடைக்க வேண்டியதே தவிர, கேட்டுப் பெறுவது அல்ல என்பதை இளைஞர்களும், முதியவர்களும் மறப்பது கூடாது. தகுதி, திறமை இரண்டையும் கல்வி மூலம் வளர்த்துக் கொண்டால், முன்னேற்றத்திற்கான கதவுகள் திறப்பதைக் காண்பீர்கள். அறிவாளிகள் பணத்தை புறக்கணிப்பதில்லை. அதற்காக பணம் ஒன்றே வாழ்க்கை என்ற முட்டாள் தனத்தையும் ஏற்பது கூடாது. பண்பாட்டைக் காப்பது நம் கடமை. அதே சமயம், பிற நாட்டவரிடம் உள்ள நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது கூடாது.நேர்மையும், விடாமுயற்சியும் மனிதனுக்கு அவசியம். செய்யும் தவறுகளால் எதிர்காலம் கேள்வியாகும் என்ற தெளிவு இருந்தால் தவறுகள் நேர்வதில்லை. (கவிஞர் ஹர்ஷானந்தர்)