உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் மூலவருக்கு அபிஷேகத் தண்ணீர் குறைப்பா!

பழநி மலைக்கோயில் மூலவருக்கு அபிஷேகத் தண்ணீர் குறைப்பா!

பழநி: பழநி மலைக்கோயில் மூலவருக்கு காலபூஜைக்கான திருமஞ்சன அபிஷேக குடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பழநி மலைக்கோயில் ஞானதண்டாயுதபாணிசுவாமிக்கு நாள் தோறும் ஆறுகாலபூஜையின் போது 64 மிராஸ் பண்டாரங்கள் மூலம் வரட்டாற்றில் இருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து மூலவருக்கு திருமஞ்சன அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒருபூஜைக்கு 3 முதல் 5 குடங்கள் அபிஷேகம் செய்யப்படும். இந்நிலையில் ஒருகால பூஜைக்கு 2 குடங்கள் மட்டுமே ஊற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நவபாஷாணங்களால் செய்யப்பட்ட மூலவருக்கு நல்லஎண்ணெய் சாத்தி, ஆகமவிதிப்படி திருமஞ்சன அபிஷேகம் செய்யவேண்டும், அதில் மாற்றம் செய்யக்கூடாது என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்துமக்கள் கட்சி மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார் கூறியதாவது: ""பழநி மலைக்கோயில் காலபூஜையில் திருமஞ்சன அபிஷேக குடங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக புகார் வருகிறது. 1984ல் ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவம் கமிட்டி சிலைபாதுகாப்பிற்காக 7 விதிகளை விதித்துள்ளது. அதில் நைவேத்யம் தொன்னை போன்ற அளவில் தான் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அபிஷேகத்திற்கு தடைஇல்லை. நவபாஷாணங்களால் ஆனது என்பதால் வெப்பம் அதிகம். ஆகையால் திருமஞ்சன தண்ணீர் குடங்களின் எண்ணிக்கையை எக் காலத்திலும் குறைக்க கூடாது. உள்ளே நீராவித் தொட்டியில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்க வேண்டும். ஆகமவிதிகள் படி பூஜை நடக்க வேண்டும்,என்றார்.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" மூலவருக்கு திருமஞ்சன அபிஷேகம் வழக்கம்போல் நடக்கிறது. இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. சிலர் வேண்டும் என்றே தவறான வதந்திகளை பரப்புகின்றனர்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !