உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் சோலார் மின் உற்பத்தி ஆகமத்திற்கு புறம்பானதா?

கோவில்களில் சோலார் மின் உற்பத்தி ஆகமத்திற்கு புறம்பானதா?

மதுரை:தமிழக கோவில்களில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தினமும் தலா, 20 கிலோ வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய, இலக்குநிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம், மின் தேவைக்கான செலவினத்தை குறைத்து, கோவில் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, சென்னை கபாலீஸ்வரர், காளிகாம்பாள்; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்; திருச்செந்துார் செந்திலாண்டவர்; பழநி தண்டாயுதபாணி; திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்; ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி, சமயபுரம் மாரியம்மன்; ஈரோடு பன்னாரி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஏயான் நிறுவனம் மூலம், நாள் ஒன்றுக்கு, 20 கிலோ வாட், சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக, 27 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தெற்காடி வீதியில் உள்ள, கோவில் இணை கமிஷனர் அலுவலக மாடியில், சூரிய ஒளி மின்சாரம் உற்பத்திக்கான, பேனல்கள் அமைக்கப்படும். இத்திட்டம் விரைவில் அமலாக உள்ளது.இதற்கிடையில், தமிழக அரசின் இந்த திட்டம், கோவில் விதிகளுக்கும், ஆகமத்திற்கும் புறம்பானது என, பல்வேறு இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.இதனால், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கு ஆதரவான கருத்துகளும் எதிர்மறையான கருத்துகளும் பரவி வருகின்றன. கோவில் ஆகமங்கள் விதியை இது மீறுவதாக இல்லை. ஆகமங்கள் என்பது, சுவாமி சிலையை எங்கே வைப்பது என்பதும், கோவில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நிர்மாணிப்பது தான், ஆகம விதி. அதனால், தாராளமாக கோவிலுக்குள் இந்த தகடு பதிக்கும் பணியை மேற்கொள்ளலாம். இது மக்களின் பயன்பாட்டிற்கானது. இதனால், கோவிலில் எந்த மாற்றமும் நிகழாது.
- சுவாமிநாதன்அர்ச்சகர், பசுபதி ஈஸ்வரர் திருகோவில், பொழிச்சலுார்

கோவில் உட்பிரகாரத்தில், சோலார் பேனல் பொருத்துவது, ஆகம விதிக்கு உட்பட்டது கிடையாது. இது சூரியனிடமிருந்து, சக்தியை வாங்குவது. ஆனால், இன்றைய சூழ்நிலைக்கு பக்தர்களின் பயன்பாட்டிற்கு இதை மேற்கொள்வதில் தவறு இல்லை. பழங்காலத்தில், கண்ணாடி மூலம் ஒளியை பிரதிபலித்து தான் கருவறைக்கு வெளிச்சத்தை கொடுத்தனர். அது போலவே, இதையும் நினைக்கலாம்.
-அய்யப்பன் கங்காதரன். அர்ச்சகர், கற்பகாம்பிகை உடனுறை

கற்பகேஸ்வரர் கோவில், கடம்பூர்.கோவிலுக்குள் இதுபோல, மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்தலாம். ஆனால், கோவில் கருவறைக்குள், இதுபோன்ற எதையும் நடைமுறைப்படுத்தக் கூடாது.அது தான், ஆகம விதி மீறலாகும். சோலார் பேனல் நிறுவுவதிலும், செயல்முறைப்படுத்துவதிலும் ஆகம விதியை மீறாமல், கோவில் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
-பாலாஜி. குருக்கள் கபாலீஸ்வரர் திருக்கோவில்,சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !