மயிலாடும் கருப்பர்!
மயிலே மயிலே நீ ஆடு - எங்கள்
மன்னவன் புகழை நீ பாடு
கோட்டையை ஆளும் கோமகனை
கோடி நலங்கள் தருபவனை
பாட்டினில் வாழும் பாவலனை
பாதம் பணிந்தே நான் பாட
(மயிலே)
சோலைக் குயில்கள் இசைபாட
காலைக் கதிரவன் ஒளி ஏற்ற
மாலைகள் சூடி வந்திடவே
மாயக் கருப்பர் மகிழ்ந்திடவே
(மயிலே)
கருப்பண்ண சுவாமி மகிழ்ந்தாலே
விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்
அரும்புகள் மலர்ந்துமணம் வீச
அதுபோல் வாழ்வும் வளமாக
(மயிலே)
புரவியில் ஏறும் புரவலனை
புளிய மரத்தடிக் காவலனை
அரவணைத் தருளும் ஆண்டவனை
அவனடிபணிந்தே நாம் பாட
(மயிலே)
கோகுல கிருஷ்ணனின் அவதாரம்
கோட்டைக் கருப்பர்எம் ஆதாரம்
தந்திடுவார் அவர்தம் பாதாரம்
இந்திரன் போல் பொருளாதாரம்
(மயிலே)
அரிவாள் ஏந்தி அன்புடனே
அறிவாய் எங்கள் அன்பினையே
பரிமேல் ஏறும் பரந்தாமா
பரிவாய் காப்பாய் பரம்பொருளே
(மயிலே)
சங்கத் தமிழால் நாம் பாட
சங்கீதங்கள் இனிமை கூட்ட
சங்கிலிக் கருப்பர் சிலம்பாட
சங்கடமெல்லாம் தீர்ந்திடவே
(மயிலே)
கோழிப் பூசை செய்திட்டால்
காளியம்மாள் களிப்பெய்வாள்
காரியமெல்லாம் சிறப்பாக
கவலைகள் பறந்து ஓடிடவே (மயிலே)
கோட்டைக் கருப்பரை நினைத்தாலே
கோவே வந்து காத்திடவே
கோட்டைக் கருப்பர் அருளாலே
கோடி நலங்கள் எம் வீடுவர (மயிலே)
மங்கள் மேளம் கொட்டியே
மங்கள ஹாரத்தி செய்தாலே
மங்களம் எங்கும் பொங்கிடவே
மங்கள வாழ்வு தங்கிடவே (மயிலே)