உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம்: ஆடிப்பூரம் விழா கோலாகலம்

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம்: ஆடிப்பூரம் விழா கோலாகலம்

நாமக்கல்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நடந்த ஆடிப்பூரம் விழாவில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலையம், முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக பங்கேற்றனர். நாமக்கல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், உலக சமாதானம் மற்றும் மத நல்லிணக்கம் பெருகவும், பருவ மழை பெய்ய வேண்டியும், மக்கள் நலம் பெறவும், ஆடிப்பூரம் விழா கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, பெண்கள் கஞ்சி கலயம், முளைப்பாரி, அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். விழாவிற்கு, நாமக்ல் மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கந்தசாமி கண்டர் மெட்ரிக் பள்ளி செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். நகராட்சி கமிஷனர் அசோக்குமார், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நாமக்கல் - மோகனூர் சாலை, கந்தசாமி கண்டர் மெட்ரிக் பள்ளியில் துவங்கிய ஊர்வலம், அண்ணாசிலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, ஆர்.பி.புதூர் வழியாக, பொன்கைலாஷ் குட்டை மேலத் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராதி வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. அங்கு, கஞ்சி வார்த்தல், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, நாமக்கல் ஆதிபராசக்தி வழிபாடு மன்ற நிர்வாகிகள், தொண்டர்கள் செய்திருந்தனர்.

* ராசிபுரம் வட்ட மேல்மருத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூர விழா நடந்தது. தொடர்ந்து, அக்னி சட்டி ஏந்தியும், கஞ்சி கலயம் எடுத்துக் கொண்டும், ஏராளமான பெண் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், ஸ்வாமி ஆன்மிக ஊர்வலம் நடந்தது. ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் துவங்கி கச்சேரி வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், பட்டணம் சாலை வழியாக சென்று ஹவுசிங் போர்டு மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அடைந்தது. அங்கு, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பங்கேற்க பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !