அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே, திருக்கொள்ளிக்காடு, பஞ்சினும் மெல்லடியாள் உடனுறை அக்னீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, திருக்கொள்ளிக்காட்டில் அமைந்துள்ள, இக்கோவிலில், தனி சன்னதியில் பொங்கு சனீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 1998ல், இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, திருப்பணிகள் நிறைவு பெற்று, கடந்த 4ம் தேதி மாலை, 6:00 மணியளவில், அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் மகா கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று அதிகாலை,4:00 மணிக்கு யாகசாலை பூஜை, கோ பூஜை முடிந்து, 5:45 மணிக்கு, கடங்கள் புறப்பட்டு, பூர்ணாஹுதி, தீபாராதனையுடன், ஆறாம் கால பூஜை நிறைவு பெற்று, 6:30 மணிக்கு, கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. 6:45 மணிக்கு, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், 9:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை,திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள், பொங்கு சனீஸ்வரர் வீதி உலா நடந்தது.