உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவளாபுரி அம்மன் கோவில்!

சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவளாபுரி அம்மன் கோவில்!

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள நடுவச்சேரியில், பழமை வாய்ந்த சிவளாபுரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக, ஆராய்ச்சியாளர் சுந்தரம், வரலாற்று ஆர்வலர் ஜெயசங்கர் கூறினர். அவர்கள் கூறியதாவது: அவிநாசி வட்டாரத்தில், சோழ மன்னர்களால் ஏறத்தாழ, 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, ஐந்து கோவில்களில், சிவளாபுரி அம்மன் கோவிலும் ஒன்று. கோவிலில், மூன்று கல்வெட்டுகள் உள்ளன. கதவில், பித்தளை தகடு பதிக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும் பதிக்கப்பட்ட கல்வெட்டு, கலியுக ஆண்டு, 4992 (விக்ருதி ஆண்டு) பங்குனி, 4ம் தேதி என, பொறிக்கப்பட்டுள்ளது.

கொறட்டு வாசல் கதவில், இரண்டாவது கல்வெட்டில், பித்தளை தகட்டிலான எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கல்வெட்டு, கோவில் முன்புற மண்டபத்தின், பலகை கல்வெட்டாக காணப்படுகிறது. பல நுாறு ஆண்டுகள் ஆனதாலும், உரிய பராமரிப்பு இல்லாததாலும், எழுத்துக்கள் நன்றாக தெரியவில்லை. இருப்பினும், இது, சோழ மன்னர்களால் இக்கோவில், 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது என்ற வரலாற்றை தெரிவிக்கிறது.தவிர சிவளாபுரி அம்மனுக்கு தீர்த்தக்கிணறு வெட்டியது, மதில்சுவர் அமைத்து, திருப்பணிகள் செய்தவர்கள் குறித்தும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.’கல்வெட்டுகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !