பொள்ளாச்சி கோவில்களில் அன்னதான திட்டம் அமல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பத்ரகாளியம்மன் கோவிலில், அரசின் அன்னதான திட்டம் நேற்று முதல் துவங்கப்பட்டது.தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களில், அன்னதான திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதில், தன்னார்வலர்கள் அளிக்கும் நன்கொடையை பெற்று, அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய் அன்னதானத்திற்கு வழங்கலாம் எனவும்; 15 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதியாக பெறப்பட்டு அன்னதானம் அவரது பெயரில் தொடர்ந்து வழங்கும் வகையிலும் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டம் படிப்படியாக கோவில்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், ஐயப்பன் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு, பொள்ளாச்சியில், பத்ரகாளியம்மன் கோவிலில், இத்திட்டம் அறிமுகப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கோவிலில், நேற்று இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பொள்ளாச்சி இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் புவனேஸ்வரி, செயல் அலுவலர்கள் வெண்மணி, ஜெயசெல்வம் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர் மகேஸ்வரி, பரம்பரை அறங்காவலர் சுகுமார் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முதல் நாள் என்பதால், 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தினசரி, 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும், என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.சுப்பிரமணிய சுவாமி கோவில்கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னதானத்திட்டம் துவக்க விழா நேற்று நடந்தது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையாளர் கார்த்திக் தலைமையில், நகராட்சித்தலைவர் சத்தியவாணிமுத்து, அ.தி.மு.க.,மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன்அமீது ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னதாக, கோவில் செயல் அலுவலர் காளியப்பன் வரவேற்றார். முதல் நாளான நேற்று வடை, பாயாசத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று, கோவிலில் அன்னதானம் திட்ட துவங்க உத்தரவு வழங்கிய முதல்வருக்கு, பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.