நெல்லையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை
திருநெல்வேலி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்பட பல்வேறு இஸ்லாம் அமைப்புகள் சார்பில் நேற்று மேலப்பாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், ஏர்வாடி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.நெல்லை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மேலப்பாளையம் மாநகராட்சித் திடலில் காலை சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர். த.மு.மு.க.,சுன்னத் ஜமாத், மறுமலர்ச்சி த.மு.மு.க.,உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தொழுகை மேற்கொண்டனர். தி.மு.க. ,எம்.எல்.ஏ.,டி.பி.எம்.,மைதீன்கான், தவ்ஹீத் ஜமாத் மேலாண்மைக் குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேட்டை, தாழையூத்து, உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. பெருநாள் தொழுகைக்குப் பின்பு குர்பானி பிராணிகளை அறுத்து அதை ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்தனர்.