உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 17ம் நூற்றாண்டில் தமிழகம் எப்படி?

17ம் நூற்றாண்டில் தமிழகம் எப்படி?

சென்னை: தென்னிந்தியாவில் புகழ் பெற்ற நகரங்களின் தோற்றம், கி.பி., 17, 18ம் நுாற்றாண்டில், எவ்வாறு இருந்தது என்பதை, நம் கண்முன் கொண்டு வரும், அரிய ஓவிய புகைப்பட கண்காட்சி மற்றும் விற்பனை, சென்னையில் நடந்து வருகிறது. சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், ரட்லேண்ட் கேட், ஐந்தாவது தெருவில், வேதா கலைக்கூடம் உள்ளது.இங்கு, தக் ஷினபாதா தென்னிந்திய பயணம் என்ற தலைப்பில், அரிய ஓவிய புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. இதில், கி.பி., 1700 மற்றும், 1800ம் ஆண்டில், தென்னிந்திய நகரங்களை வலம் வந்த, ஆங்கிலேய ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை கொண்டு, அப்போதைய அச்சு முறையை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட, அரிய புகைப்படங்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புகைப்படமும், காண்போரை அந்த காலத்திற்கு அழைத்து செல்கின்றன. கண்காட்சியில், அனைவரையும் கவர்வது, திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்த போர் காட்சி; இது, தத்ரூபமாக இடம் பெற்றுள்ளது.

திப்பு சுல்தான் கோட்டை பின்னணியில், போர் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படம், 25 அங்குலம் அகலம், 108 அங்குலம் நீளம் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு புகைப்படத்தின் கீழேயும், அப்படத்தை வரைந்த ஓவியர் பெயர், அந்த புகைப்படத்தை அச்சிட்டவர் பெயர் இடம் பெற்றுள்ளன. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, கலங்கரை விளக்கம் பகுதி, சென்னை கடற்கரைப் பகுதி, ராஜாஜி ஹால், 1860ம் ஆண்டு - சென்னை ரயில் நிலைய தோற்றம், திருச்சி மலைக்கோட்டை, மாமல்லபுரம் கடற்கரை கோவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் கோவில் திருவிழாவில், பல்வேறு தரப்பு மக்கள் பங்கேற்ற காட்சி, சுவாமி ஊர்வலம் போன்றவை இடம் பெற்றள்ளன. பொங்கல் விழாவையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு காட்சியும், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓவியத்தில் இடம் பெற்றுள்ள ஊர்களின் பெயர், அப்போது எவ்வாறு அழைக்கப்பட்டதோ, அதே பெயரில் அச்சிடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, காஞ்சிபுரம், கஞ்சிவரம் என்றும் திருச்சிராப்பள்ளி, திருச்சினோபொலி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதுச்சேரி, கிருஷ்ணகிரி, குன்னுார், கோத்தகிரி, மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டினம், ஆற்காடு நவாப் அரண்மனை, மசூதி, கோவில் போன்றவற்றின் அப்போதைய தோற்றம் தொடர்பான ஓவிய புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இவை கறுப்பு - வெள்ளை மற்றும் வண்ண புகைப்படங்களாக உள்ளன. இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, காப்பாளர் அங்கிரா ஆர்யா, கலைக்கூட நிறுவனர் பிரீத்தி ஆகியோர் செய்துள்ளனர்.கண்காட்சி குறித்து, கலைக்கூட ஊழியர் இசை அரசி கூறியதாவது:இக்கண்காட்சி, நவ., 25ம் தேதி வரை நடைபெறும்; அனுமதி இலவசம்; கண்காட்சியில், 192 படைப்புகள் இடம் பெற்றுள்ளன. தினமும் காலை, 11:00 மணியில் இருந்து இரவு, 7:00 மணி வரை, கண்காட்சியை பார்வையிடலாம். ஞாயிறு அன்று பகல், 12:00 மணியில் இருந்து, மாலை, 6:00 மணி வரை பார்வையிடலாம். செவ்வாய் விடுமுறை நாள். கண்காட்சியில் உள்ள புகைப்படங்கள், 15 ஆயிரம் ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய் வரை மதிப்பு கொண்டவை; விற்பனையும் உண்டு. மேலும் விவரங்களுக்கு 044 - 43090422 டெலிபோன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு இசை அரசி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !