கண்களை கவர்ந்த நவராத்திரி கொலு!
கோவை: கோவை ராமநாதபுரம் மற்றும் சிங்காநல்லுார் பகுதியில், பல வண்ணங்களில் கண்கவர் கொலு அமைத்து, நமது வாசகர்கள் அசத்தினர்; சிறப்பாக கொலு அமைத்த, மூன்று பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்தும் நவராத்திரி கொலு விசிட் நிகழ்ச்சி, நேற்று ராமநாதபுரம் மற்றும் சிங்காநல்லுார் பகுதியில் நடந்தது. இப்பகுதி வாசகர்கள் தங்களது கொலு போட்டோவை நேற்று வாட்ஸ் அப்ல் அனுப்பி, நமது கொலு விசிட் குழுவை திணறடித்தனர். அஷ்டலட்சுமி, தசவதாரம், மனுநீதி சோழன், கிருஷ்ணா லீலா, பாட்டி வடை சுட்ட கதை, மதுரை மீனாட்சி, திருப்பதி வெங்கடாசலபதி, அர்த்தநாரீஸ்வரர், தேசத்தலைவர்கள், முருகன் - வள்ளி - தெய்வானை, ஹயக்கிரீவர், சிவன் பார்வதி, அறுபடைவீடு, லலிதாம்பிகை கோவில், தெப்பக்குளம், கைலாசம், சக்கரத்தாழ்வார், வனத்தை காப்போம், மழை நீர் உயிர் நீர், வீட்டுக்கு ஒரு மரம் வளர்போம் ஆகியவற்றை கருவாகக் கொண்டு கொலு அமைந்திருந்தனர். இவர்களில் சிறப்பாக கொலு அமைத்த, ராமநாதபுரத்தை சேர்ந்த மாயா பிரபு, உமா, சிங்காநல்லுாரை சேர்ந்த ஞானாம்பாள் ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.