தாண்டியா ஆட்டமும் ஆட... தசரா கூட்டமும் கூட...!
கோவையில் வடமாநில இளம்பெண்கள், முகத்தில் சிவப்பு வண்ணச்சாயங்களை பூசி, தாண்டியா நடனமாடி தசரா விழா கொண்டாடினர். நவராத்திரி ஒன்பது நாட்கள் முடிந்து, பத்தாம் நாளில் தசாரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோவை பீளமேடு சுகுணா திருமண மண்டபத்திலும், ராம்நகர் எஸ்.கே.வி.கே. ஹாலிலும் தசரா விழா நடந்தது. அங்கு வடமாநில கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருந்த பிரமாண்ட காளி தேவி சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காளிக்கு பிடித்த, இனிப்பு, கார வகை பதார்த்தங்கள், பல வகையான உணவுகள் படைக்கப்பட்டன. காலை மற்றும் மாலை இரவு என்று மூன்று நேரங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஒன்பது நாட்கள் நவராத்திரி நிறைவடைந்து, 10ம் நாளான நேற்று, தர்பா என்றழைக்கப்படும் தாண்டியா நடனம் நடந்தது. இளம்பெண்கள் கைகோர்த்து நடனமாடினர். அதற்கேற்ப இசை இசைக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். குஜராத்தியர், மராத்தியர், வங்காளிகள் உட்பட வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் விழாவில் பங்கேற்றனர். மக்கள் சிவப்பு வண்ணத்தை ஒருவருக்கொருவர் பூசி மகிழ்ந்தனர். பின், துர்க்கை சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று, குளங்களில் கரைத்தனர். ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும், நவராத்திரி விழா நாட்களில் தொடர் விரதம் மேற்கொண்டு, சர்க்கரை, உப்பு, துவர்ப்பு, நெய், எண்ணெய், காரம் இல்லாத உணவை ஒரு நேரம் மட்டும் உட்கொண்டு உபவாசம் இருந்தனர். ஒன்பது நாட்கள் விரதத்தை நிறைவு செய்து, பத்தாம் நாளான நேற்று தசரா விழாவை கொண்டாடினர்.