உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலக்கல் மாரியம்மன் திருவிழாவுக்கு திருத்தேர் தயார்!

சூலக்கல் மாரியம்மன் திருவிழாவுக்கு திருத்தேர் தயார்!

பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் திருத்தேர் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. விரைவில் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலங்களில் சூலக்கல் மாரியம்மன் கோவில் முக்கியமானது. ஆண்டுதோறும், 18 கிராம மக்கள் அம்மனை நேர்கொண்டு வழிபட்டு, மாவிளக்கு எடுத்து வந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இக்கோவில் திருவிழாவும், திருத்தேர்வடம் பிடித்தலும் நடக்கவில்லை. இதற்கு, பல நுாறாண்டுகள் பழமையான தேரை, புதுப்பித்த பிறகே, விழா நடத்த வேண்டும் என, முடிவு செய்யப்பட்டதே காரணமாகும். சக்தி வாய்ந்த அம்மனை தரிசிக்க, கோவை மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் பொதுமக்கள் வந்து சென்றனர். வேண்டுதலை நிறைவேற்றும் அம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இச்சூழலில், பழுதடைந்த தேருக்கு பதிலாக, புதுத்தேர் அமைக்கும் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, 27.5 லட்சம் ரூபாய் செலவில், கடந்த ஆண்டு பணிகள் துவங்கின. பெரம்பலுார் மற்றும் பழநியைச் சேர்ந்த 15 சிற்பிகள் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓராண்டாக நடந்து வரும் இத்தேர் அமைக்கும் பணி, தற்போது முடிவு பெறும் நிலைக்கு வந்துள்ளது. இதுகுறித்து கோவில் அலுவலர்களிடம் கேட்டபோது, தற்போது, புதிய தேர் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. சிற்ப வேலைப்பாடுகளுடன் திருப்பணிகள் நடக்கிறது. இன்னும் ஒரு மாதகாலத்தில் இப்பணிகள் நிறைவு பெற்று விடும். அதன்பிறகே, கோவில் திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !