புலி குத்திக் கல் திருப்பூரில் கண்டெடுப்பு!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், தமிழ் எழுத்துக்களுடன் கூடிய, புலி குத்திக் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர், வீர ராசேந்திரன் தொல்லி யல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள், அரிதான, தமிழ் எழுத்துக்களுடன் கூடிய, புலி குத்திக் கல்லை கண்டெடுத்துள்ளனர். ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது: கொடுவாய் பகுதியில், பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. சந்தைக்கடை பகுதியில் கிடைத்துள்ள, நடுகல் எனப்படும் இந்த புலி குத்திக் கல்லை, மகனது வீரத்தின் நினைவுச் சின்னமாக, தாய் ஒருவர் உருவாக்கிஉள்ளார். அதில், முத்துபுவன வாணராயன் மகன் முத்தனுக்கு, தாய் வெட்டுவித்த கல் என, வடிக்கப்பட்டுள்ளது.மாட்டு மந்தையைக் காப்பாற்ற போரிட்டு, வீர மரணம் அடைந்துள்ளதை குறிப்பிடும் வகையில், 100 செ.மீ., அகலம்; 120 செ.மீ., நீளத்தில் அமைந்துள்ளது. வீரன், புலியை ஈட்டியால் குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குனர் பூங்குன்றன் கூறுகையில், தமிழ் எழுத்துக்களுடன் கிடைத்துள்ள இந்த நடுகல், மிகவும் சிறப்பு வாய்ந்தது; இது, கி.பி., 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது, என்றார்.