கூத்தாண்டவர் விழா: குவிந்த பக்தர்கள்!
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்டு ரோடு அருகே உள்ள திடலில், கூத்தாண்டவர் தலை ஏற்றம், இறக்கல் நிகழ்ச்சி நடந்தது. இப்பகுதியில், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, தொம்பகாலனூர், காளிப்பேட்டை, மஞ்சவாடி வரதகவுண்டனூர், கோம்பூர், கல்லாத்துப்பட்டி, நடுப்பட்டி உட்பட, 18 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள், ஐப்பசி மாதம், இரு நாட்கள் கூத்தாண்டவர் தலை ஏறும் மற்றும் இறங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடுவர். அதன்படி, நேற்று முன்தினம் இந்த நிகழ்ச்சி நடந்தது. சாமந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கூத்தாண்டவரின் தலையை வெட்டி இறக்கும் நிகழ்ச்சி, 4 மணிக்கு நடந்தது. அப்போது கூத்தாண்டவர் மீது சூடப்பட்டிருந்த பூக்களை, பெண்கள் மீது பூசாரிகள் தூவினர். தங்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்க திருமணம் ஆன பெண்களும், திருமணம் நடக்க வேண்டிய இளம் பெண்களும், பூக்களை போட்டி போட்டு கொண்டு எடுத்து சென்றனர்.