வாரியாரின் வாக்கு வன்மை!
ஒரு முறை, மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில், திருநாவுக்கரசரின் பெருமை பற்றி சொற்பொழிவு நிகழ்த்தி கொண்டிருந்தார் வாரியார் சுவாமிகள். மெய்யன்பர்களே... திருச்சிற்றம்பலத்தானின் திருவிளையாடல் காரணமாக, சைவ சமயத்திலிருந்து, சமண மதத்திற்கு போன திருநாவுக்கரசர், பின், சூலைநோயால் பாதிக்கப்பட்டு, உடல் துடித்து, மனம் நொந்து போனார். உடனே, தன் சகோதரி திலகவதியைக் காண புறப்பட்டு சென்றார். கண்டார் சகோதரியை; சொன்னார் சூலை நோய் பற்றி! தந்தார் அவர் திருநீறு; அதை நெற்றியிலும், நெஞ்சிலும், பின், உடல் முழுவதும் பூசி கொண்டவர், சிறிது வாயிலும் இட்டுக் கொண்டார். மறுநாள் காலை, மாயமாய் மறைந்து போயிற்று சூலைநோய்! நீறணிந்த நிமலனை, நினைந்து நினைந்து நெஞ்சம் நெக்குருகினார். சமணத்தை விட்டார்; சிவாலயங்களை செப்பனிடும் திருப்பணி மேற்கொண்டார். பதிகங்களால் சிவபெருமானை பாடினார். அவர் நாவன்மையும், சிவத் தொண்டும் நாடெங்கும் பரவ, நாவுக்கரசர் புகழ் ஓங்கியது.
இது பொறுக்காத சமணர்கள், மன்னன் மகேந்திரவர்ம பல்லவனிடம், நாவுக்கரசரை பற்றி, பொய்யான செய்திகள் சொல்லி, அவரை கொல்ல வேண்டுமென்று து?பம் போட்டனர். ஆராய்ந்தறியாத அரசனும், அவர்களின் சூது வார்த்தையை நம்பி, நாவுக்கரசரை, சுண்ணாம்பு காளவாயில் தள்ள உத்தரவு பிறப்பித்தான். நாவுக்கரசரோ, கனல் கக்கும் சுண்ணாம்பு காளவாயில் சம்மணமிட்டு அமர்ந்தார்; சிவயோகத்தில் ஆழ்ந்தார். எரியும் காளவாய், பன்னீர் சொரியும் பசுஞ்சோலையாக குளிர்விக்க, நெஞ்சம் குழைந்த நாவுக்கரசர், மாசில் வீணையும், மாலை மதியமும், வீசுதென்றலும் என்று பதிகம் பாடி, பக்தி பரவசமானார். அக்காட்சியை கண்டு திடுக்கிட்ட மன்னன், உணவில் விஷம் வைத்து கொல்ல ஆணையிட்டான். ஆலகால விஷத்தையே உண்ட, நீலகண்டனின் தொண்டரான நாவுக்கரசர், இதையும் ஒரு கை பார்ப்போம்... என்று, விஷ உணவை விருந்தாகச் சுவைத்து உண்டு, ஏப்பம் விட்டார். இதை பார்த்து, திகைத்துப் போன அரசன், யானை காலால், நாவுக்கரசர் தலையை இடற கட்டளையிட்டான், யானையோ, தவம் செய்து சிவப்பழமாக காட்சி தரும் நாவுக்கரசரை, வலம் வந்து, அவர் முன், மண்டியிட்டது.
இதைக்கண்டு அதிர்ந்து போன அரசன், நாவுக்கரசரை கல்து?ணில், சங்கிலியால் பிணைத்து, நடுக்கடலில் கொண்டு போய் மூழ்கடிக்குமாறு காவலர்களை ஏவினான். அவர்களும் அப்படியே செய்தனர். நாவுக்கரசர் சற்றும் நடுக்கம் கொள்ளாமல், சொற்றுணை வேதியன் சோதியானவன்... என்று பதிகம் பாட, அவர் பக்தியின் சக்தியால், இரும்பு சங்கிலிகள் மலர் சரங்களாக மாறின. கல்து?ண் கனமற்ற தக்கையாகி, பின் படகாக உருவெடுக்க, அதில் ஏறி, கரை ஒதுங்கினார். நாவுக்கரசரின் அரும் பெரும் சக்தியை அறிந்த அரசன், தன் தவறை உணர்ந்தான். திரும்பவும், சைவ சமயத்திற்கு திரும்பினான். என்னே என் தலைவர் திருநாவுக்கரசரின் பக்தி! அதன் சக்தி... என்று வாரியார் சுவாமிகள், மனம் மகிழ்ந்து சொல்லி கொண்டிருக்கையில், நாத்திக இயக்கத்தை சேர்ந்த அன்பர் ஒருவர் எழுந்து, சரி உங்க தலைவர் மாதிரி, உங்களையும் கல்லோடு சேர்த்து கட்டி, இந்த கோவில் பொற்றாமரை குளத்திலே து?க்கி போட்டுடலாம்; உங்க தலைவர், திருநாவுக்கரசு மாதிரி, அவர் தொண்டர் நீங்க தப்பித்து வர்றீங்களான்னு பார்க்கலாமா... என்று கேட்க, சபையோர் திடுக்கிட்டு போயினர்.
ஆனால், வாரியார் சுவாமிகள் நிதானமாக, அப்படியா... சரி... என் தலைவர் இருக்கட்டும்; உன் தலைவர் யாரு? அவர் மதுரைக்கு வந்திருக்காரா... அவர் வந்தா, அவருக்கு நீ என்ன செய்வே? என்று கேட்டார். அந்த நாத்திக அன்பர், எங்க தலைவர் மதுரைக்கு வந்தா, அவருக்கு மாலை மரியாதை செய்வது தான் என் முதல் வேலை. அன்றைக்கு பூக்கடையிலே மாலையே கிடைக்காது; எல்லாருமே தலைவருக்கு மாலை வாங்கிப் போடுவதற்காக, போட்டி போட்டு வாங்கிட்டு போயிடுவாங்க... என்றார். தலைவருக்கு மாலை மரியாதை செய்கின்றனரே... அவர் தொண்டனான உனக்கு யாரும் மாலை மரியாதை செய்ய மாட்டார்களா? என்று கேட்டார் வாரியார். அதெப்படி... தலைவருக்குத்தான் மாலை மரியாதை செய்வாங்க; அதெல்லாம் தொண்டனுக்கு எப்படி கிடைக்கும்... என்றார் அந்த அன்பர். உடனே, வாரியார், எப்படி மாலை மரியாதையெல்லாம் உன் தலைவரைத் தவிர, தொண்டரான உனக்கில்லயோ, அதுபோலத்தான் அற்புத சக்தி, அருமை, பெருமையெல்லாம் என் தலைவர் திருநாவுக்கரசருக்கு மட்டும் தான் உண்டு; அவர் தொண்டனான எனக்கு அந்த சக்தி கிடையாது... என்று சொல்லவும், அந்த அன்பர் வாயடைத்து போய் உட்கார்ந்து விட்டார். சபையோர், தங்கள் கரவொலியால், வாரியாரின் வாக்கு சாதுர்யத்தை பாராட்டி மகிழ்ந்தனர்.