வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும்?
அதிகாலை, 5:30 மணிக்கு எழுந்து, படுக்கை விரிப்புகளை சுருட்டி வைத்து, மூதேவியை வெளியே அனுப்பி வைத்தால் தான், வீட்டுக்குள் வருவாள் லட்சுமி. சூரிய உதயத்திற்கு முன், வாசல் தெளித்து, கோலமிட்டால் அவ்வீட்டில் செல்வம் கொழிக்கும். காலையிலும், மாலையிலும் குடும்பத்தினர் கூட்டாகச் சேர்ந்து, இறைவனை பிரார்த்தனை செய்தால், அவ்வீட்டிற்குள் லட்சுமி வருவாள். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, சப்தம் போட்டு, மரியாதை இல்லாமல் பேசிக் கொண்டு இருந்தால், அவ்வீட்டிற்குள் லட்சுமி வரமாட்டாள். தினமும் காலை, மாலை குத்துவிளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஏற்றிய விளக்கு, குறைந்தபட்சம், ஒரு மணி நேரமாவது எரிவது நல்லது. பெண்கள், தலைவிரிகோலமாக இருக்கக் கூடாது; தலைமுடி நுனியில், ஒரு சிறு முடிச்சாவது போட்டுக் கொள்வது நல்லது. உடம்பில் ஆடையின்றி நீராடக் கூடாது. பெண்கள் தலையில் நேர்வகிடு எடுத்து, வகிட்டில்குங்குமம் இடுவது நல்லது. வரலட்சுமி விரதம், காரடையான் நோன்பு, மாசி மாதத்தில் உள்ள நல்ல நாட்கள், திருமண நாளுக்கு முந்திய நாள், உள்ளூர் திருவிழா நாட்களில், மாங்கல்யம் மாற்றுவது நல்லது.