தன்வந்திரி சாய்பாபா கோவிலில் உலக நன்மைக்காக மஹா ஹோமம்
சேலம்: சேலத்தில், 20 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள, தன்வந்திரி சாய்பாபா கோவிலில், உலக நன்மைக்காக நடந்த மஹா ஹோமத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சேலம், சட்டக்கல்லூரி அருகில் உள்ள அய்யன்கரடு பகுதியில், 20 கோடி ரூபாய் செலவில் தன்வந்திரி சாய்பாபா கோவில் கட்டப்பட உள்ளது. இந்த கோவில், பிரசித்தி பெற்ற ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில் போன்றே தியான பீடம், முதியோர் இல்லம், மூளைவளர்ச்சி குன்றியோர் இல்லம், தோட்டம் உள்ளிட்டவையுடன் அமைக்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு, உலக நன்மைக்காக, நேற்று மஹா ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹோமம் காலை, 5 மணிக்கு துவங்கியது. கணபதி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், தன்வந்திரி ஹோமம், பிரத்யங்கார ஹோமம் உள்ளிட்ட, 4 விதமான ஹோமங்கள் நடத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். சத்குரு யோகி சாய்ராம் தலைமை வகித்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பிரசாதம் வழங்கப்பட்டது.