சபரிமலையில் அரிசி சுத்தம் செய்ய நவீன இயந்திரம் வாங்க முடிவு தேவசம்போர்டு தலைவர் தகவல்!
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் அரிசியை சுத்தம் செய்து பயன்படுத்த நவீன இயந்திரம் வாங்கப்படும் என்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: இருமுடி கட்டில் பக்தர்கள் கொண்டு வரும் அரிசியை காணிக்கையாக சமர்ப்பிக்கின்றனர். இந்த அரிசியை பயன்படுத்தி சர்க்கரை பொங்கல், வெள்ளை சோறு போன்றவை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு நாள் 15 டன் அரிசி வரை இதற்காக தேவைப்படுகிறது. அரிசியில் கல், மண், நாணயங்கள், இரும்பு துண்டுகள் போன்றவை கிடக்கிறது. தற்போது சிறிய அளவிலான இயந்திரம் பயன்படுத்தப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை. எனவே நவீன இயந்திரம் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் ஐயப்பனுக்கு நிவேத்யம் செய்யப்படும் அரிசியும் சுத்தம் செய்யப்படும்.
சபரிமலை பக்தர்கள் வரும் பாதையில் இடைதங்கும் இடத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தேவசம்போர்டு கோயில்களில், உள்ளூர் கமிட்டிகளுடன் சேர்ந்து வசதிகள் செய்யப்படும். சபரிமலையில் தங்கும் அறை எடுப்பவர்கள் செலுத்தும் டிப்பாசிட் தொகை திருப்பி கொடுப்பதில் பக்தர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இங்கு அறை எடுப்பவர்களுக்கான நிபந்தனைகள் அனைத்து மொழியிலும் எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறை எடுப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்குள் சரண்டர் செய்தால் டிப்பாசிட் தொகை திருப்பி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.