உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவில் குடமுழுக்கு யாகசாலை பூஜை துவக்கம்

மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவில் குடமுழுக்கு யாகசாலை பூஜை துவக்கம்

திருச்சி: மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், டிச., 6ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவுக்கான யாக சாலைக்கான பூஜை, நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. திருச்சி, மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவில், சுகப்பிரசவ பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. கடந்த, 2000ம் ஆண்டு கோவிலில் குடமுழுக்கு விழா நடந்தது. 12 ஆண்டு முடிந்ததையடுத்து, ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்த கடந்த, 2012ம் ஆண்டு கோவிலில் திருப்பணிகளுக்கான பாலாயம் செய்யப்பட்டன. தாயுமான ஸ்வாமி, மட்டுவார் குழலம்மை விமானங்கள், சாலை கோபுரம், மாணிக்க விநாயகர் சன்னதி, ராஜகோபுரம், கருவறை விமானங்கள் ஆகியவற்றின் விக்ரகங்களில், 16.88 லட்சத்தில் திருப்பணி மேற்கொள்ளப் பட்டது. தவிர, மண்டபங்கள் மற்றும் தூண்களில் வரையப்பட்ட ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டன. தங்க விமானத்துக்கு, கடந்த, 2000 ஆண்டு குடமுழுக்கின் போது, 3.855 கிராம் தங்கம் பயன்படுத்தினர். தற்போது, ஆறு கிலோ தங்கம் பயன்படுத்தி உள்ளனர். திருப்பணி முடிந்ததை அடுத்து, நேற்று காலை, 9 மணிக்கு யாக சாலை பூஜை துவங்கியது. முன்னதாக, கணபதி ஹேமம் நடந்தது. நாளை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு திருமஞ்சனமும், டிசம்பர், 3ம் தேதி மாலை, 6 மணிக்கு முதல் கால யாக பூஜை துவங்குகிறது. டிசம்பர், 6ம் தேதி காலை, 8 முதல், 9.30 மணிக்குள், தருமை ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமசாரிய ஸ்வாமிகள் தலைமையில், அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !