வாசவி கண்ணிகா பரமேஸ்வரி சிலை பாதம் தேனிக்கு வருகை
தேனி:தேனிக்கு வந்துள்ள ஆந்திராவில் இருந்து வாசவி கண்ணிகா பரமேஸ்வரி சிலையின் பாதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.ஆந்திரா, மேற்கு கோதாவரி மாவட்டம், பெனுகொண்டா என்ற ஊரில் வாசவி கண்ணிகா பரமேஸ்வரி அம்மனின் 90 அடி உயர ஐம்பொன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதன் எடை 45 ஆயிரம் கிலோ. இந்த அம்மனின் பாதம் ஐம்பொன்னால் ஒன்னரை டன் எடையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அம்மனின் ஐம்பொன் பாதம் தாங்கிய வேன் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு,கேரள மாநிலங்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு வருகிறது. தேனி மாவட்டத்திற்கு வந்த அம்மன் பாதத்திற்கு அல்லிநகரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மன் பாதத்தில் பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. இந்த பாதம் கொடாங்கிபட்டி, போடி, தேவாரம், கோம்பை, உத்தமபாளையம், காமயக்கவுண்டன்பட்டி, கம்பம், கூடலூர், சின்னமனூர், உப்புக்கோட்டை, ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய ஊர்களில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்ல உள்ளது.