திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைப்பாதை போக்குவரத்து துவக்கம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு, வாகனங்கள் செல்லும் வகையில் சாலை சீரமைப்பு செய்யப்பட்டதால், நேற்று முதல் போக்குவரத்து துவங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு, வாகனங்கள் செல்லும் மலைப்பாதை, கடந்த அக்டோபர், 29ம் தேதி பெய்த கன மழையால், மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, 21 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை சீரமைப்புபணிகள் நடந்தது. கான்கிரீட் சுவர்கள் அமைத்து பாதை சீரமைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த, 14ம் தேதி முதல், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. அறநிலையத்துறை பஸ், 21ம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என, கலெக்டர் தட்சிணாமூர்த்தி கூறியிருந்தார். ஆனால், தேவஸ்தான அதிகாரிகள் நேற்றே, பஸ் போக்குவரத்து செயல்படுத்தினர். அதனால், மார்கழி மாதம் நடக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜையில், பெண்கள், பக்தர்கள் என, பலரும் ஆர்முடன் பஸ்சில் பயணித்தனர்.